முஸ்லீம் மகாநாடு. குடி அரசு - சொற்பொழிவு - 21,06.1931

Rate this item
(0 votes)

தலைவரவர்களே! கனவான்களே!! 

இந்தப் பெரிய மகாநாட்டில் என்னை சில வார்த்தைகள் பேசும்படி, அழைத்ததற்கு நன்றி செலுத்துகிறேன். இந்தச் சமயமானது அரசியல் சம்மந்தமான ஒரு நெருக்கடியான சமயம் என்பதை முஸ்லீம் சமூகமானது உணர்ந்து ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்துக்கொண்டு வருகின்றன. அபிப்பிராயங்களில் சற்று ஒருவருக்கொருவர் - மாறுபட்டவர்களாயிருக்கலாம். ஆனாலும், விஷயத்தின் நெருக்கடியை உணராதவர்கள் இல்லை. இந்தச் சமயத்தில் எல்லா முஸ்லீம் மகாநாட்டிலும், சமீபத்தில் வருவதாயிருக்கும் அரசியல் சீர்திருத்தத்தில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதே முக்கிய பிரச்சினையாய் இருக்கின்றது. அதிலும் முக்கியமாய் இருப்பது அச்சீர்திருத்தங்களுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளாய் தேர்தலில் பிரதிநிதித்துவம் பெறுவதா? அல்லது இந்துக்களின் பிரதிநிதியாய் பிரதிநிதித்துவம் பெறுவதா? என்பதே முக்கிய பிரச்சினையாய் இருந்து வருகின்றது. உண்மையை யோக்கியமாய்ப் பேச வேண்டுமானால் முஸ்லீம்கள் முஸ்லீம் பிரதிநிதிகளாய் முஸ்லிம்களின் ஓட்டைக் கொண்டே பிரதிநிதிகளாக அங்கம் பெறவேண்டும் என்பதாகவே இந்தியாவின் பெரும்பான்மையாகிய முஸ்லீம்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். இதுசரியா? தப்பா? என்பது வேறு விஷயம். அதோடு அது சரியா? தப்பா? என்று முடிவு சொல்லுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதைப் பொருத்தே தப்பு சரி என்கின்ற முடிவைப் பற்றியும் பேச வேண்டியதாகும், 

நிற்க, இவ்வளவு விஷமபிரசாரம் வெளிப்படையான ஒரு உண்மை யை அதாவது முஸ்லிம்களின் பெரும்பான்மையான மக்கள் தனித் தொகுதியை விரும்புகின்றார்கள் என்பது குருடனும் அறியும்படியாக இருந்ததும் ஒரு சில இந்து தேசிய பிழைப்புக்காரர்களும் தங்கள் சுயநல வாழ்வுக்கு தேசியத்தை ஏற்படுத்தி அதை நம்பி இருக்கின்றவர்களும் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்துப் பிரசாரம் செய்கின்றார்கள். இந்த ஆட்களே இந்திய தேசியத் தலைவர்களானால் இவர்களால் நடைபெறும் தேசிய ஆஷியில் எவ்வளவு நாணயமும் யோக்கியமும் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாகவே இந்துக்களும் முஸ்லிம்களும் மதத்திலும், ஆச்சார அனுஷ்டானங்களிலும் மற்றும் எவ்வளவோ விஷயங்களிலும் பிரிவுபட்டு இருக்கின்றார்கள், இரண்டு சமூகங்களும் ஒன்றுபடுவது என்பது சுலபத்தில் முடியாத காரியமாகும். வரப்போகும் சீர்திருத்தத்திலும் இவ்விரண்டு சமூகங்களும் ஒன்று சேரமுடியாதபடி அதாவது அவரவர்கள் மதத்திற்கும் ஆச்சார அனுஷ்டானத்திற்கும் சிறிதும் பங்கம் ஏற்படாதபடி பத்திரமாய் காப்பாற்றப் படவேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாகும். ஆகவே, இரண்டு நேர்க் கோடுகள் எப்படி ஒன்று சேர முடியாதோ அப்படிப் போல் ஜாக்கிரதையாய் காப்பாற்றப்படும் ஒன்றுக் கொன்று மாறான மதத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு நாளும் ஒன்று சேர முடியாது அப்படி இருக்க வேண்டி ஏற்பட்ட இரு சமூகங் களும் அவரவர்கள் பிரதிநிதிகளை அவரவர்களே தெரிந்தெடுத்துக் கொள் வதன் மூலம்தான் பத்திரமாய் இருக்க முடியும். 

ஆகவே இந்த நிலையில் முஸ்லீம்கள் தனித்தொகுதி கேட்பதில் பிசகு ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கு ஆகேடிபனை சொல்லுவதில் தான் எனக்கு நியாயமிருப்பதாகப்புலப்படவில்லை. 

வாயில் வேண்டுமானால் “இந்து முஸ்லீம் சகோதரர்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமை" என்று பேசலாம். அதில் ஒரு சிறிதும் நாணயமே இருக்க முடியாது. ஏனெனில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள மத சம்பந்தமான சமூக சம்பந்தமான கொள்கைகள் சம்பந்தமான ஒற்றுமைகள் எப்படிப்பட்டது என்பது எனக்கும் கொஞ்சம் தெரியும்.

இந்து முஸ்லீம் ஒற்றுமையும் நம்பிக்கைக்கு பாத்திரமான சகோதரத் தன்மையும் வேண்டுமானால் அவற்றிற்கு இடையூறாயிருக்கும் மதக் கொள்கைகளில் முதலில் திருத்தம் ஏற்படவேண்டும். அப்படிக்கில்லாமல் இருவர் மதக் கொள்கைகளையும் பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் என் பதில் யார் கழுத்தை யார் அறுப்பது?" என்கின்ற உண்மைதான் அதில் தொக்கியிருக்கின்றது. அதுவேதான் அதற்கு அருத்தமாய் இருக்க முடியும். ஏனெனில் இன்றைய தினம் அரசியல் துறையில் இருக்கும் மக்கள் அரசியலை விட மதத்தையே பிரதானமாய்க் கருதி இருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மத ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே அரசியல் ஆதிக்கம் வேண்டும் என்கின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆகவே இந்தக் கூட்டத்தார்கள் “தேசியம் முக்கியமானது. அரசியல் முக்கியமானது” வெள்ளைக்காரனை இந்த நாட்டை விட்டு ஒழிப்பது முக்கியமானது, என்று சொல்லுவதை நான் ஹம்பக் = புரட்டு என்றே கருதுகின்றேன் ஆதலால் சிறுபான்மையாய் இருக்கின்றவர்களுக்கு ஒன்று போதுமான பாதுகாப்பு வேண்டும். அல்லது இருவருக்கும் பொதுவாய் இருவரும் அல்லாதவரான மத்தியஸ்தர் ஒருவர் வேண்டும். மத்தியஸ்தனுக்கு கூலி கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதற்கு யார் என்ன செய்வது? ஆகையால் இன்றைய தினம் நமக்கு மத்தியஸ்தன் வேண்டாம் என்றால் கட்டாயம் பந்தோபஸ்து வேண்டியதுதான். ஆதலால் முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி தொகுதியையே தான் வேண்டும் என்பதில் குற்றமில்லை. 

இந்து முஸ்லீம்களில் இந்தியாவுக்கு இன்னார்தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. உரிமை இருக்கின்றது என்றால் இருவருக்குமே உரிமை இருக்கின்றது. இந்தியாவில் இருக்கும் 7Y, கோடி முஸ்லீம்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மார்க்கம் ஏற்படுவதற்கு முன்பே இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த சமூகத்தின் பரம்பரையார் ஆவார்கள். அவர்களது மார்க்கம் வேறானதினாலேயே அவர்கள் இந்தியர்களல்லாதவர்களாய்ப் போய்விட முடியாது. இந்தியாவில் உள்ள யாருடைய உரிமைக்கும் அவர்களது உரிமை இளைத்ததாகி விடாது. இந்துக்கள் என்று சொல்லப்படுகின்றவர்களும் இந்துமதம் என்பது தோன்றுவதற்கு முன்பே இங்கு பிறந்து வளர்ந்து வரும் சமூகத்தைச் சேர்ந்த வர்களாவார்கள். அவர்களுக்கும் சகல உரிமையும் உண்டு. ஆதலால் இதில் ஒருவர் மேல் ஒருவர் கீழ் அல்லது ஒருவர் சொந்தக்காரர். ஒருவர் அன்னியர் என்று பேசுவதெல்லாம் கையில் வலுத்தவன் காரியமாகுமே ஒழிய நியாய் மான காரியமாகாது. 

ஆதலால் முஸ்லீம்கள் இந்தச் சமயம் ஏமாந்து போகக் கூடாது என்றே சொல்லுவேன். “விடிய விடிய கண் விழித்து இருந்து விடியற்காலம் திருடன் வருகின்ற நேரத்தில் தூங்கி ஏமார்ந்து விடாதீர்கள்" என்றே சொல்லுகின்றேன். எப்பொழுது தேசியவாதிகளும் மகாத்மாக்களும்" எங்களுக்கு மதத்தைப் பற்றி கவலை இல்லை என்கின்றார்களோ அப்பொழுது வேண்டுமானால் தனித் தொகுதியை பற்றி கவலை இல்லை என்று சொல்லி விடலாம். அதுவரை பத்திரமாகத்தான் இருக்கவேண்டும். 

ஏனெனில் நமது பிரதிநிதி என்பதாக தேர்தலுக்கு நிற்பவர்கள் எல்லாம் நிற்கின்றவரை ஓட்டு கேட்கின்ற வரையில், வெற்றி பெற்று அங்கத்தின ராகின்ற வரையில் நமது பிரதிநிதி என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வேலை ஆனவுடன் பிறகு அவர்களுக்கு மாத்திரம்தான் அவர்கள் பிரதிநிதிகளாகி அவர்கள் சொந்த சௌகரியத்திற்காக அந்தப்பதவியை எவ்வளவு இழிவாய் வேண்டுமானாலும் உபயோப்படுத்தி விடுகின்றார்கள். இப்படிப் பட்ட மக்கள்தான் இன்று எந்த சமூகத்திலும் பிரதிநிதியாகத் தகுந்தவர்களாய் இருக்கின்றார்கள். 

இம்மாதிரி ஆட்களுக்கு தனித்தொகுதி இவ்வாவிட்டால் அச்சமூகத் திற்கு பெரிய ஆபத்து என்றுதான் சொல்லுவேன். இப்பொழுதே தனித் தொகுதியின் மூலம் பிரதிநிதி ஆனவர்களே அந்த ஸ்தானத்தை எவ்வளவு தப்பாய் உபயோகிக்கின்றார்கள் என்றும் தெரிந்தெடுத்த மக்களின் அபிப்பிராயத்திற்கு எவ்வளவு விரோதமாய் இருக்கின்றார்கள் என்றும் பாருங்கள். 

 

ஆகவே பொதுத் தொகுதியில் தெரிந்தெடுக்கப்படும் 33 பிரதி நிதிகளால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நன்மையை விட தனித் தொகுதியால் தெரிந்தெடுக்கப்படும் 23 பிரதிநிதிகள் இருந்தால் அதிகமான நன்மையே ஏற்படும். என்ன நன்மையென்று சிலர் கேட்பார்கள். நன்மை என்ன என்பது யாருக்கும் தெரிந்ததுதான். உத்தியோகங்கள் பதவிபட்டம் பணம் சம் பாதிக்க சௌகரியங்கள் ஆகியவைகள்தான் தேசீயமாகவும் அரசியல் சீர்திருத்த மாகவும் இருந்து வருகின்றது. இதுதான் இனி வரப்போகின்ற தேசியத்திலும், சீர்திருத்தத்திலும் கிடைக்கப் போகின்றது. இதை மறுப்பது ஜாலவித்தை யாகுமே ஒழிய நாணையமாகாது. ஆகவே இவை எல்லோருக்கும் சரி சமமாய் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் தனித்தொகுதி வேண்டு மென்பதாகும். 

தவிர, தனித்தொகுதியால் ஒற்றுமை ஏற்படாது என்கின்றார்கள். இதிலும் சிறிது கூட அர்த்தமில்லை என்றுதான் சொல்லுவேன். இப்போது சுமார் 20 வருவ காலமாய் தனித் தொகுதிதான் இருந்து வருகின்றது. இதனால் என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது? என்ன ஒற்றுமையில்லாமல் போய்விட்டது? என்று கேட்கின்றேன். இப்போது இதை மாற்ற வேண்டிய அவசியமான காரியமென்ன? என்றும் கேட்கின்றேன், கூட்டுத் தொகுதி யாயிருந்தால் எவ்வளவோ கலவரங்கள் ஏற்பட்டு இருக்கும். உதாரணமாகக் கூட்டுத் தொகுதி உள்ள முனிசிபாலிட்டிகளில் இந்து முஸ்லீம் கலகம் மனஸ்தாபம் அல்லது அபிப்பிராய பேதம் இல்லாத முனிசிபாலிட்டி ஒன்றைக் காட்டுங்கள். எலக்வான் காலத்தில் இந்து முஸ்லீம் மதத் துவேமே எலக்ஷன் பிரசாரமாய் இருந்ததும், இருப்பதும் எனக்கு நன்றாய்த் தெரியும். ஒரு வார்டில் ஒரு இந்துவும் ஒரு முஸ்லீமும் தேர்தலுக்கு நின்றால் இந்துவானவன் ஓட்டர்களிடம் சென்று "துலுக்கனுக்கு ஓட்டுப் போடாதே" என்றுதான் முதலில் சொல்லுகிறான். ஒரு முஸ்லீமானவன் "ஒரு காபிருக்கு ஒட்டுப் போடாதே” என்றுதான் சொல்லுகிறான். இப்படிச் சொல்ல பயப்படுகிற இடத்திலும் கூட “நான் ஒரு இந்துவாச்சே எனக்கு மட்டுப் போடக்கூடாதா?" "நான் ஒரு இஸ்லாமானவனாச்சுதே, எனக்கு ஓட்டுப் போடக்கூடாதா?" என்று கேட்பதோடு இருவர்களும் ஓட்டர்களை "நீ யாருக்குப் பிறந்தவன்" என்று கூடக் கேட்டு விடுகின்றார்கள். ஆகவே கூட்டுத் தொகுதி தேர்தல்கள் மதத் துவேஷத்தையும் வகுப்பு துவேஷத்தையும் கிளப்பிவிட்டுத் தீரவேண்டிய அவசிய முடையதாகவே ஆகிவிடுகின்றது. தமிழ்நாட்டில் கூட்டுத் தொகுதிகளே அநேக இடங்களில் மதத்துவேஷத்தை கிளப்பிவிட்டிருக்கின்றது. இந்து முஸ்லீம்கள் சகோதரர்கள் ஆகவேண்டு மானால் ஒற்றுமையுடையவர்களாக வேண்டுமானால் முதலில் வெளிவேஷத் திவாவது நடை உடை பாவனைகளிலாவது ஒன்றுபோல காணப்பட இரு சமூகமும் ஒப்புமா என்று கேட்கின்றேன். வெளிக்குக் கூட ஒற்றுமையாக முடியாத சமூகம் பிறகு உள் அந்தரங்கத்தில் பரஸ்பரம் எப்படி ஒற்றுமையும் நம்பிக்கையும் அடைய முடியும்? ஆகவே சகோதரர்களே! நீங்கள் தனித்தொகுதியே விரும்பி அதையே ஏகமனதாய் நிறைவேற்றிக் கொண்ட விஷயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இவ்வளவோ டேயே நீங்கள் நின்றுவிடாமல் இதைக் கடைசிவரை கொண்டு செலுத்தி முடிவில் வெற்றிபெற முனைந்து நில்லுங்கள் 

குறிப்பு:14-5-1931 அன்று கோவை சாமிபிக்சர் பாலசில் நடை பெற்று கோவை மாவட்ட முஸ்லிம் மாநாட்டின் இரண்டாம் தாளில் ஆற்றிய உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 21,06.1931

Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.